Archives: ஜூன் 2023

பிரிவு வார்த்தைகள்

ஜான் பெர்கின்ஸ், மரிப்பதற்கு முன்பாக அவருடைய ஆதரவாளர்களுக்கு ஒரு செய்தியை விட்டுச் செல்கிறார். இன நல்லிணக்கத்தின் போராளியாக அறியப்பட்ட பெர்கின்ஸ், “மனந்திரும்புதலே தேவனிடம் திரும்புவதற்கான ஒரே வழி. நீங்கள் மனந்திரும்பாவிட்டால், நீங்கள் அனைவரும் அழிந்து போவீர்கள்” என்று தன் கடைசி வார்த்தைகளை பதிவுசெய்கிறார். 

இதே வார்த்தைகளை வேதாகமத்தில் இயேசுவோடு சேர்த்து அநேகர் பயன்படுத்தியிருக்கின்றனர். இயேசு, “நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்” (லூக்கா 13:3) என்று சொல்லுகிறார். பேதுரு, “உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்” (அப்போஸ்தலர் 3:20) என்று சொல்லுகிறார். 

வேதாகமத்தில் வெகுகாலத்திற்கு முன்பாகவே அனைத்து ஜனங்களின் மனந்திரும்புதலை விரும்பிய ஒரு மனிதர் இருக்கிறார். தீர்;க்கதரிசியும், ஆசாரியனும், நியாயாதிபதியுமாயிருக்கிற சாமுவேல், “இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி” (1 சாமுவேல் 12:1) சொன்னது என்னவென்றால், “பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பெல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரைவிட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்” (வச. 20) என்று சொல்லுகிறார். தீமையிலிருந்து விலகி முழுஇருதயத்தோடும் தேவனை தேடச்செய்வதே அவருடைய மனந்திரும்புதலின் செய்தி. 

நாமெல்லாரும் பாவம் செய்து தேவனை விட்டு வழிவிலகிப்போனோம். நாமெல்லாருக்கும் மனந்திரும்புதல் அவசியப்படுகிறது. அதாவது, பாவத்தை விட்டு வழிவிலகி, நம்மை மன்னித்து வழிநடத்தும் இயேசுவிடம் திரும்புவது. தேவன் தன்னுடைய நாமத்தை கனப்படுத்தும் மனிதர்களுடைய வாழ்க்கையில் செயல்படுத்தும் மனந்திரும்புதலின் வல்லமையை அறிந்த ஜான் பெர்கின்ஸ் மற்றும் சாமுவேல் என்னும் இந்த இரண்டு மனிதர்களுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுப்போம்.

எதிர்பாராத இடங்களில் சுவிசேஷம்

நான் நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு, அதிக முறை திரைப்படங்களிலும் டிவியிலும் பார்த்த ஹாலிவுட், கலிபோர்னியா போன்ற இடங்களை தற்போது நேரில் பார்க்கிறேன். லாஸ் ஏஞ்சல்ஸ் மலையடிவாரத்தில், எனது ஹோட்டல் ஜன்னலில் இருந்து பார்த்தபோது, அந்த மகத்தான வெள்ளை எழுத்துக்கள், புகழ்பெற்ற அந்த மலைப்பகுதி முழுவதும் கெம்பீரமாய் படர்ந்திருப்பதை பார்க்கமுடிந்தது. 

வேறு ஒன்றையும் நான் பார்த்தேன். அதின் இடது பக்கத்தின் கீழே சிலுவை ஒன்று தென்பட்டது. அதை நான் எந்த திரைப்படத்திலும் பார்த்ததில்லை. அந்த தருணத்தில் நான் என் ஹோட்டலிலிருந்து வெளியேறி, அங்கிருந்த திருச்சபையில் இருக்கும் ஒரு சில மாணவர்களை அழைத்துக்கொண்டு இயேசுவைக் குறித்து அறிவிக்க புறப்பட்டேன். 

ஹாலிவுட் போன்ற இடங்கள் தேவனுடைய இராஜ்யத்திற்கு முற்றிலும் விரோதமான கேளிக்கை ஸ்தலமாய் நாம் பார்க்கலாம். ஆனால் அங்கேயும் கிறிஸ்துவின் பிரசன்னம் இருப்பதை நான் கண்டு ஆச்சரியப்பட்டேன். 

பரிசேயர்கள், இயேசு கடந்து சென்ற இடங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அவர்கள் எதிர்பார்த்த இடங்களுக்கு அவர் செல்லவில்லை. மாறாக, அசுத்தமான வாழ்க்கை வாழ்ந்த ஆயக்காரரோடும் பாவிகளோடும் நேரம் செலவழித்தார் (வச. 15). யாருக்கு கிறிஸ்து அவசியப்பட்டாரோ அவர்களோடு இயேசு இருந்தார் (வச. 16-17).

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, இன்றும் எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத மனிதர்கள் மத்தியில் கிறிஸ்து தன்னுடைய நற்செய்தியை பிரஸ்தாப்படுத்துகிறார். அந்த ஊழியப்பணியில் நாமும் பங்கேற்பதற்கு கிறிஸ்து நமக்கும் அழைப்பு விடுக்கிறார்.  

நீங்கள் தனிமையாயிருக்கும்போது

இரவு 7 மணியளவில், ஹ_ய்-லியாங் தனது சமையலறையில் அரிசி உணவையும் மீதியான மீன்களையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பக்கத்து அபார்ட்மெண்டில் இருந்த சுவா குடும்பமும் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அங்கு எழுந்த அவர்களின் சிரிப்பு மற்றும்  உரையாடலின் சத்தமானது ஹ_ய்-லியாங்கின் அமைதியை பாதித்தது. அவருடைய மனைவி இறந்ததிலிருந்து அவர் அந்த வீட்டில் தனிமையில் வசித்து வந்தார். அவர் தனிமையோடு வாழக் கற்றுக்கொண்டார். அது ஒருவகையான மனவலியை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அவருடைய மேசையில் இருந்த உணவும் அதை உண்ணும் குச்சியும் அவரை வெகுவாய் பாதித்தது. 

அவர் படுக்கைக்கு செல்லும் முன்பு, ஹ_ய்-லியாங் அவருக்கு பிரியமான சங்கீதம் 23ஐ வாசித்தார். அவரை வெகுவாய் பாதித்த வார்த்தைகள் “தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” (வச. 4) என்பதே. ஒரு மேய்ப்பன் ஆடுகளோடு இடைபடும் இயல்பான செய்கையை விடுத்து, அந்த ஆட்டின் அனைத்து காரியங்களிலும் தலையிட்டு அதைப் பாதுகாக்கும் மேய்ப்பனை இவ்வார்த்தை பிரதிபலிக்கிறது (வச. 2-5). அது ஹ_ய்-லியாங்கிற்கு ஆறுதலளித்தது. 

நமக்காக அல்லது நம்முடன் யாரோ இருக்கிறார்கள் என்பது தனிமையான நேரங்களில் மிகவும் ஆறுதலாயிருக்கிறது. தேவனுடைய தெய்வீக அன்பானது அவருடைய பிள்ளைகளின் மீது எப்போதும் இருக்கும் என்று வாக்களிக்கிறார் (சங்கீதம் 103:17). அவர் நம்மை விட்டு விலகுவதில்லை (எபிரெயர் 13:5). நம்முடைய சமையலறையிலோ, பேருந்தும் வேலைக்கு செல்லும்போதோ, ஜனநெருக்கடியான சந்தைகளிலோ, எங்கெல்லாம் நாம் தனிமையாய் உணருகிறோமோ, அங்கெல்லாம் நம் மேய்ப்பன் நம்மோடிருக்கிறார். “தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” என்று நாமும் சொல்வோம்.

எதிரிகள் மீது எரிகிற தழல்களை குவித்தல்

சிறைக் காவலரிடம் இருந்து தினமும் அடிவாங்குவதை டான் சகித்துக் கொண்டார். அப்படிப்பட்ட கடினமான மனிதனை நேசிக்கும்படிக்கு கிறிஸ்துவால் உணர்த்தப்பட்டதால், ஒரு நாள் காலை நேரத்தில் அவரிடத்தில் அடிவாங்கும்போது, “ஐயா, என் வாழ்நாள் முழுவதும் நான் தினமும் உங்களைப் பார்க்கப் போகிறேன் என்றால், நாம் நண்பர்களாக மாறலாமே” என்று கூறினார். அந்த சிறைக்காவலாளியோ, “இல்லை! நாம் எப்போதும் நண்பர்களாக மாறவே முடியாது” என்றார். ஆனால் டான் வற்புறுத்தி தன் கையை அவரிடமாய் நீட்டினார். 

அந்த சிறை அதிகாரி உறைந்து நின்றார். அவர் அவருடைய கையைக் குலுக்க, அந்த அதிகாரி அவருடைய கையை உறுதியாய் பற்றிக்கொண்டார். அவருடைய கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவர் “டான், என்னுடைய பெயர் ரொசாக். நான் உன் சிநேகிதனாயிருக்க விரும்புகிறேன்” என்று சொன்னாராம். அதற்கு பின்பு, அந்த சிறையதிகாரி, டானை அடிக்க தன் கையை ஓங்கியதேயில்லையாம். 

வேதம், “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்” (நீதிமொழிகள் 25:21-22) என்று சொல்லுகிறது. இந்த எரிகிற தழல் உருவகமானது, எகிப்தியர்களின் சடங்காச்சாரத்தை நினைவுகூருகிறது. அங்கு குற்றவாளி தனது தலையின் மீது சூடான நிலக்கரியின் கிண்ணத்தை சுமந்து கொண்டு தனது மனந்திரும்புதலை வெளிப்படுத்தும் வழக்கம் நடைமுறையிலிருந்தது. அதுபோலவே, நம்முடைய இரக்கம் நம் எதிரிகளை வெட்கத்தால் முகம் சிவக்கச் செய்யலாம், ஆனால் அது அவர்களை மனந்திரும்புவதற்கு வழிவகுக்கும்.

உங்கள் சத்துரு யார்? யாரை நீங்கள் வெறுக்கிறீர்கள்? டான் தன்னுடைய இருதயத்தையும் தன்னுடைய எதிரியின் இருதயத்தையும் மாற்றும் வல்லமை கிறிஸ்துவின் இரக்கத்திற்கு உண்டு என்று நம்பினார். நாமும் அவ்வாறு நம்ப முடியும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் உன்னை மறப்பதில்லை

நான் சிறுவயதில் தபால் தலைகளை சேகரித்தேன். எனது பொழுதுபோக்கைப் பற்றி கேள்விப்பட்ட என் தாத்தா, தினமும் தனது அலுவலகத் தபாலில் இருந்து தபால் தலைகளைச் சேமிக்கத் தொடங்கினார். நான் என் தாத்தா பாட்டியை சந்திக்கும் போதெல்லாம், பலவிதமான அழகான முத்திரைகள் நிரப்பப்பட்ட ஒரு உறையை என்னிடம் கொடுப்பார். “நான் என்னுடைய அலுவலில் மும்முரமாக இருந்தாலும் உன்னை நான் மறக்கமாட்டேன” என்று ஒருமுறை என்னிடம் கூறினார். 
பாசத்தை வெளிப்படையாய் காண்பிக்கும் திறன் தாத்தாக்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் நான் அவருடைய அன்பை ஆழமாக உணர்ந்தேன். எல்லையற்ற ஆழமான வழியில், “நான் உன்னை மறப்பதில்லை” (ஏசாயா 49:15) என்று சொன்னதினிமித்தம் தேவன் இஸ்ரவேலின் மீது தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். விக்கிரகாராதனைக்காகவும் கீழ்ப்படியாமைக்காகவும் பாபிலோனில் துன்பப்பட்ட தேவனுடைய ஜனங்கள், “ஆண்டவர் என்னை மறந்தார்” (வச. 14) என்று புலம்பினர். ஆனால் தம்முடைய ஜனங்கள் மீதான கர்த்தருடைய அன்பு மாறவில்லை. அவர் அவர்களுக்கு மன்னிப்பையும் மறுசீரமைப்பையும் உறுதியளித்தார் (வச. 8-13). 
“என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” (வச. 16) இஸ்ரவேலரிடம் தேவன் சொன்னார். இன்று நமக்கும் அப்படியே சொல்கிறார். அவருடைய உறுதியளிக்கும் வார்த்தைகளை நான் சிந்திக்கையில், அது நம்மீதான அன்பையும் நம்முடைய இரட்சிப்பிற்காகவும் விரிந்திருக்கும் இயேசுவின் ஆணியடிக்கப்பட்ட தழும்புகள் நிறைந்த கைகளை மிகவும் ஆழமாக நினைவூட்டுகிறது (யோவான் 20:24-27). என் தாத்தாவின் தபால் தலைகள் மற்றும் அவரது மென்மையான வார்த்தைகள் போல, தேவன் மன்னிக்கும் தனது கரத்தை அவரது அன்பின் நித்திய அடையாளமாக நீட்டினார். அவருடைய என்றும் மாறாத அன்பிற்காக அவருக்கு நன்றி சொல்வோம். அவர் நம்மை என்றும் மறக்கமாட்டார். 

திருச்சபையாயிரு!

கோவிட்-19 தொற்றுநோயின்போது, டேவ் மற்றும் கார்லா ஒரு தேவாலய வீட்டைத் தேடி பல மாதங்கள் செலவிட்டனர். தொற்று பரவிய காலங்கிளல் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, பல்வேறு தனிப்பட்ட அனுபவங்களை மட்டுப்படுத்தி, அவற்றை மேலும் கடினமாக்கியது. அவர்கள் கிறிஸ்தவ திருச்சபையோடு ஐக்கியம்கொள்வதற்கு ஏங்கினர். “ஒரு திருச்சபையைக் கண்டுபிடிப்பது கடினமானது” என்று கார்லா எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். என் திருச்சபை குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கான எனது சொந்த ஏக்கத்திலிருந்து எனக்குள் ஒரு உணர்தல் எழுந்தது. “திருச்சபையாக இருப்பது கடினமானது" என்று நான் பதிலளித்தேன். அந்த காலங்களில், எங்கள் திருச்சபை சுற்றியுள்ள மக்களுக்கு உணவு வழங்குதல், ஆன்லைன் சேவைகளை உருவாக்குதல் மற்றும் ஆதரவுடனும் ஜெபத்துடனும் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் போன் செய்து நலம் விசாரித்தது. அந்த சேவையில் நானும் எனது கணவரும் கலந்துகொண்டாலும், மாறக்கூடிய இந்த உலகத்தில் நாம் திருச்சபையாய் செயல்படுவது எப்படி என்று ஆச்சரியப்பட்டோம்.  
எபிரெயர் 10:25இல் ஆசிரியர் “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்” இருக்கும்படிக்கு ஊக்குவிக்கிறார். ஒருவேளை உபத்திரவத்தின் நிமித்தமோ (வச. 32-34), சோர்வின் நிமித்தமாகவோ (12:3) ஐக்கியத்தை விடும் அபாயம் அவர்களுக்கு நேரிட்டிருக்கலாம். அவர்களுக்கு இந்த தூண்டுதல் அவசியப்பட்டது.  
இன்று, எனக்கும் ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது. உங்களுக்கும் தேவைப்படுகிறதா? நடைமுறை சூழ்நிலைகள் நாம் கூடிவரும் திருச்சபையை பாதிக்கும் தருவாயில் நாம் திருச்சபையாய் நிலைநிற்போமா? ஆக்கப்பூர்வமாக ஒருவரையொருவர் ஊக்குவிப்போம். தேவன் நம்மை வழிநடத்துவது போல ஒருவரையொருவர் கட்டியெழுப்புவோம். நம்முடைய வளங்களைப் பகிர்ந்து கொள்வோம். ஆதரவான செய்திகளை பகிர்வோம். நம்மால் முடிந்தவரை சேகரிப்போம். ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள். நாமே திருச்சபையாக நிற்போம். 

பாரபட்சமும் தேவசிநேகமும்

“நான் எதிர்பார்த்தது நீ இல்லை. நான் உன்னை வெறுக்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் அப்படியில்லை.” அந்த இளைஞனின் வார்த்தைகள் கடுமையாகத் தெரிந்தது. ஆனால் அவை உண்மையில் கருணை காட்டுவதற்கான முயற்சியாக இருந்தது. நான் அவர் வசிக்கும் நாட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய அந்த தேசம் பல தசாப்தங்களுக்கு முன்னர் என்னுடைய தேசத்தோடு யுத்தம் செய்தது. நாங்கள் ஒன்றாக வகுப்பில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டோம். அவர் தொலைவில் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவரை ஏதாகிலும் புண்படுத்திவிட்டேனா என்று நான் கேட்டபோது, அவர், “இல்லை . . . . அதுதான் விஷயம். என் தாத்தா அந்தப் போரில் கொல்லப்பட்டார், அதற்காக நான் உங்கள் மக்களையும் உங்கள் நாட்டையும் வெறுத்தேன். ஆனால் இப்போது நமக்குள் எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது!” என்று பதிலளித்தார். 
பாரபட்சம் என்னும் உணர்வு மனித இனத்தைப் போலவே மிகவும் பழமையானது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு, இயேசு நாசரேத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாத்தான்வேல் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அவனுடைய பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று சொல்கிறார். நாத்தான்வேல் இயேசுவைப் போலவே கலிலேயா பகுதியில் வாழ்ந்தவர். தேவனுடைய மேசியா வேறொரு இடத்திலிருந்து வருவார் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். மற்ற கலிலேயர்களும் நாசரேத்தை இழிவாகப் பார்த்தனர். ஏனென்றால் அது ஒரு சிறிய அடையாளமில்லாத ஊராக இருந்தது.  
இது மிகவும் தெளிவாக உள்ளது. நாத்தான்வேலின் பதில், இயேசு அவனை நேசிப்பதற்கு தடையாக இருக்கவில்லை. மேலும் அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவின் சீஷனாக மாறுகிறான். நாத்தான்வேல் பின்பாக, “நீர் தேவனுடைய குமாரன்” (வச. 49) என்று இயேசுவின் மகத்துவத்தை சாட்சியிடுகிறான். தேவனுடைய மறுரூபமாக்கும் அன்பிற்கு எதிராக நிற்கக்கூடிய எந்த பாரபட்சமும் இல்லை.